பல்லடத்தில் 'பறந்த' விளம்பர பலகைகள்; அதிகாரிகள் 'உறக்கம்' இனி களையுமா?

பல்லடம்: பல்லடத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு, விளம்பரப் பலகைகள் துாக்கி வீசப்பட்ட நிலையில், இனியாவது அதிகாரிகள் விழிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை வீசிய சூறைக்காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் பல இடங்களில் முறிந்துவிழுந்தன.
பல இடங்களில், சாலையோரம் மற்றும் பொது இடங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் துாக்கி வீசப்பட்டன. சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க கட்டுப்பாடு உள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி பெற்ற பின், விதிமுறைகளை கடைபிடித்துதான் வைக்க வேண்டும். ஆனால், விளம்பரப் பலகைகள், அரசியல் கட்சி பேனர்கள் உள்ளிட்டவை வைப்பதில், எந்தவித விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை.
கடந்த காலங்களில் எண்ணற்ற விபத்துகள், உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், ஐகோர்ட் உத்தரவும் காற்றில் பறக்க விடப்படுகிறது.
இயற்கை பேரிடர்களின் போது, இதுபோன்ற விளம்பரப்பலகைகள் சாய்ந்தால், மக்களுக்கு தாங்கொணா துயரத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அதிகாரிகள் இவற்றை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
-
துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
டிரம்ப், புடின் ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப நெருக்கம்: சீமான் கலகலப்பு
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு