கூலி உயர்வு கேட்டு தொடர் உண்ணாவிரதம்; விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சோமனுார்; புதிய கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கோரி, ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக, விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு கேட்டும், ஆண்டுக்கு, ஆறு சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கடந்த, மார்ச், 19ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், இரு மாவட்டங்களிலும், கலெக்டர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை சந்தித்தும் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். தீர்வு கிடைக்க தாமதமாவதால், விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சோமனூர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சோமனூரில் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பு நிர்வாகிகள் அவிநாசி முத்துசாமி, சோமனூர் பூபதி ஆகியோர் கூறுகையில், 'கடந்த, 20 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில், புதிய கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனால், போராட்டத்தை தீவிரப்படுத்த, வரும், ஏப்., 11 முதல், 15 ம்தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

மாநில, மாவட்ட நிர்வாகங்கள் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைந்து தீர்வு கண்டு, விசைத்தறி ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement