தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் திருநெல்வேலி முதலிடம்!

4


திருநெல்வேலி: தமிழக அளவில் மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் பெறுவதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளதாக டீன் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் மூளைச்சாவடைந்தவர்களின் இதயம், கிட்னி, கல்லீரல், நுரையீரல், தோல், கருவிழிகள் உடல் உறுப்புகள் தானம் பெறுவது நடக்கிறது. 2024ல் அதிகபட்சமாக 11 பேரிடம் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு ஏப்ரல் 5ம் வரையிலும் 5 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இதுவரை 24 நபர்களின் 126 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
அவை திருநெல்வேலியில் மற்றும் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையாக இருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக பொருத்தப்படுகிறது.


தற்போது மாநில அளவில் உடல் உறுப்புகள் தானம் பெற்றதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளதற்காக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்ட குழுவினரை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், துறைச் செயலர் செந்தில்குமார், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணி, திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் ஆகியோர் பாராட்டினர். இவ்வாறு டீன் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்தார்.

Advertisement