திரிணமுல் எம்.பி.,க்கள் கோஷ்டிச்சண்டை; கதறி அழுத மஹ்வா மொய்த்ரா!

புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களின் கோஷ்டிச்சண்டை, வாட்ஸ்அப் மோதல் வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு, பார்லியின் இரு அவைகளிலும் எம்.பி.,க்கள் உள்ளனர்.
மம்தா பேனர்ஜி டில்லிப் பக்கம் வருவதே இல்லை என்பதால், அவரது கட்சி எம்.பி.,க்கள் அனைவரும், 'நானே ராஜா நானே மந்திரி' என்பது போல் டில்லியில் நடந்து கொள்கின்றனர்.
அவர்களுக்குள் கோஷ்டிச்சண்டையும் அவ்வப்போது நடப்பது வழக்கம். கட்சியின் எம்.பி.,க்கள் வாட்ஸ்அப் குழுவில் நடந்த வார்த்தை மோதல்கள், வீடியோ வடிவில் வெளியே வந்துள்ளன.
அந்த கட்சியின் மூத்த எம்.பி.,க்களில் ஒருவரான கல்யாண் பானர்ஜி, ஒரு பெண் எம்.பி.,யை திட்டுவது போல் காட்சிகள் உள்ளன.
''அவர் பார்லியில் பேசுவதற்காக அதிக நேரம் தரும்படி எனக்கு அழுத்தம் தருவதை ஏற்க முடியாது. நான் அந்த நாகரிகமற்ற பெண்ணை சகித்துக் கொள்ள முடியாது,'' என்று அந்த வீடியோவில் கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார்.
அப்போது திரிணமுல் எம்.பி., டெரிக் ஓ பிரையன் அவரை சமாதானம் செய்கிறார். 'நாம் பொது இடத்தில் இருக்கிறோம் சகோதரர். உங்களிடம் நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி அமைதியாக இருக்கும்படி கூறுகிறார்.
''அவர், என்னைப் பார்த்து உரத்த குரலில் கூச்சல் போட்டார். அவருக்கு நான் தக்க பதிலடி கொடுத்தேன். உடனே அவர், அங்கிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடம் சென்று என்னை கைது செய்யச் சொல்கிறார்,'' என்கிறார் கல்யாண் பானர்ஜி.
''அவருக்கு மோடி, அதானியை விட்டால் வேறு அரசியலே கிடையாது. வேறு யாரையும் அவர் எதிர்ப்பது கிடையாது. என்னை கைது செய்யச் சொல்ல அவர் யார்,'' என்றும் அவர் கோபத்துடன் கேட்கிறார்.
இந்த மோதல், கல்யாண் பானர்னிக்கும், மஹ்வா மொய்த்ராவுக்கும் இடையே நடந்ததாக மற்றொரு திரிணமுல் எம்.பி., சவுகதா ராய் கூறியுள்ளார்.
பார்லி வளாகத்தில் மஹ்வா மொய்த்ரா கதறி அழுதார் என்றும், கல்யாண் பானர்ஜி அவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
''கல்யாண் பானர்ஜியின் செயல்பாடுகள் பற்றி பல எம்.பி.,க்கள் புகார் கூறுகின்றனர். அவரது செயல்கள் சகிக்க முடியாதவை. மம்தாவுக்கு இது பற்றி சொல்லப்பட வேண்டும்,'' என்றும் சவுகதா கூறினார்.
பதிலுக்கு கல்யாண் பானர்ஜி, சவுகதா ராயை திட்டித்தீர்த்தார். 'அவருக்கு நல்ல குணநலன்களே கிடையாது. எல்லோருக்கும் இடையூறு செய்வது தான் அவருக்கு வேலை. அவர் லஞ்சம் வாங்குவதாக வீடியோ காட்சிகள் எல்லாம் வந்தன' என்றார்.
''நான் சொல்வது தவறு என்று மம்தா பானர்ஜி கூறினால் ராஜினாமா செய்து விடுவேன்' என்றும் கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார்.
இந்த மோதலை பார்த்த மற்றொரு எம்.பி.,யான கீர்த்தி ஆசாத், அமைதியாக இருக்கும்படியும், குழந்தைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கல்யாணுக்கு அறிவுரை கூறினார்.பதிலுக்கு அவரையும் கல்யாண் திட்டினார். ''எனக்கு அறிவுரை கூற வேண்டாம். நீங்கள் பா.ஜ., கட்சியில் உட்கட்சி அரசியல் செய்ததற்காக துாக்கி எறியப்பட்டவர்,'' என்று எடுத்தெறிந்து பேசினார்.
குறிப்பிட்ட இந்த மோதல் சம்பவம், ஏப்.,4ல் திரிணமுல் எம்.பி.,க்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது நடந்துள்ளது.
நடந்த சம்பவம் பற்றி அறிந்த மம்தா பானர்ஜி, இந்த மோதல் பற்றி பேசுவதற்கு கட்சி எம்.பி.,க்களுக்கு தடை விதித்துள்ளார்.
இந்த வீடியாக்கள், வாட்ஸ்அப் மோதல்களை பா.ஜ., கட்சியின் ஐ.டி., விங் செயலாளர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார்.











மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா