ரஜத் படிதருக்கு கவாஸ்கர் பாராட்டு

மும்பை: 'பெங்களூரு அணி 'ரிலாக்ஸ்' கேப்டன் ரஜத் படிதர் தலைமையில், வெற்றிக்கான வழியை கண்டறிந்துள்ளது,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிரிமியர் தொடரில் பெங்களூரு அணி இதுவரை நடந்த 17 சீசனில் ஒரு கோப்பை கூட வென்றதில்லை. 2009, 2011, 2016 என மூன்று முறை பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். இம்முறை ரஜத் படிதர் தலைமையில் களமிறங்கி உள்ளது.
17 ஆண்டுக்குப் பின் சென்னையில் வென்றது. தொடர்ந்து 6 போட்டிக்குப் பின், மும்பை வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்றது. இம்முறை முதல் 4 போட்டியில் 3ல் வென்றது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
ரஜத் படிதர் சிறந்த கேப்டனாக தெரிகிறார். 17 ஆண்டுகளாக எவ்வித கோப்பையும் வெல்லாத பெங்களூரு அணி, 'ரிலாக்சாக' செயல்படும் கேப்டனுடன், அணியின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை, இப்போது புரிந்து கொண்டனர். மற்ற வீரர்களும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அணியின் வெற்றிக்கு உதவுகின்றனர்.
எப்போது கேட்டாலும் உதவும் மனப்பான்மையுடன் உள்ள தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்கள், சக பணியாளர்கள், அணியில் உள்ளனர்.
இதில் தினேஷ் கார்த்திக் திறமை குறித்து யாரும் அதிகம் பேசுவது இல்லை. இளம் வீரர்களும் அதிக நேரம் செலவிடும் அவர், தேவையான 'அட்வைஸ்' தருகிறார். இதுபோல, வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சக வீரர்கள், பணியாளர்களை பெற்றிருப்பது ரஜத் படிதரின் அதிர்ஷ்டம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

கேப்டனுக்கு அபராதம்
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு (221/5) அணி, 12 ரன் வித்தியாசத்தில் மும்பையை (209/9) வீழ்த்தியது. இப்போட்டியில் பெங்களூரு அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசவில்லை. இது முதன் முறை என்பதால் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதருக்கு, போட்டி சம்பளத்தில் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement