'சென்னை ஸ்பெஷல் குழம்பு'...ருசித்த பஞ்சாப் * தொடர்ந்து நான்காவது தோல்வி

முல்லன்புர்: பிரிமியர் போட்டிக்கான விளம்பரத்தில் ஓட்டலுக்கு வருவார் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ். சாப்பிட என்ன வேண்டும் என 'சர்வர்' கேட்பார். அதற்கு கூலாக 'CSK' என 'ஆர்டர்' கொடுத்துவிட்டு.... 'சென்னை ஸ்பெஷல் குழம்பு' என விளக்கம் கொடுப்பார். இதற்கு ஏற்ப நேற்றைய லீக் போட்டியில் சென்னை அணியை குழம்பு போல ருசித்த பஞ்சாப் அணி, வெற்றியை வசமாக்கியது. சென்னை அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை சந்தித்தது.
பஞ்சாப், முல்லன்புர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
கலீல் நம்பிக்கை
பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது முதல் ஓவர் வீசினார். இதன் முதல், 5வது பந்துகளில் ஆர்யா, சிக்சர் அடிக்க, 17 ரன் கிடைத்தன. பிரப்சிம்ரன் 'டக்' அவுட்டானார். மீண்டும் வந்த கலீல் அகமது, ஷ்ரேயஸ் (9), ஸ்டாய்னிசை (4) வெளியேற்றினார்.
அஷ்வின் 'இரண்டு'
அடுத்து வந்த அஷ்வின் வீசிய முதல் ஓவரில் ஆர்யா, வதேரா தலா ஒரு சிக்சர் அடிக்க, 21 ரன் எடுக்கப்பட்டன. போட்டியின் 8வது ஓவரை வீசிய அஷ்வின் இரட்டை அடி கொடுத்தார். 2வது பந்தில் வதேராவை (9) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் அபாயகரமாக மேக்ஸ்வெல்லை (1), 'கேட்ச்' செய்து அனுப்பினார்.
ஆர்யா சதம்
மறுபக்கம் பதிரனா, ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய ஆர்யா, 39 பந்தில் சதம் கடந்தார். 42 பந்தில் 103 ரன் (ஸ்டிரைக் ரேட் 245.23) எடுத்த ஆர்யா, நுார் அகமது சுழலில் சங்கரிடம் 'பிடி' கொடுத்தார். ஷஷாங்க் கடைசி பந்தில் அரைசதம் எட்டினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 219/6 ரன் குவித்தது. ஷஷாங்க் (52), யான்சென் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
கான்வே ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு ரச்சின், கான்வே ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது ரச்சின் (36) அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் (1) வந்த வேகத்தில் வெளியேறினார். ஷிவம் துபே சற்று வேகமாக ரன் சேர்க்க, பஞ்சாப் பீல்டர்கள் பல 'கேட்ச்' வாய்ப்புகளை நழுவவிட்டனர். சென்னை அணி 13 ஓவரில் 120/2 ரன் எடுத்தது.
யான்சென் வீசிய 14வது ஓவரில் கான்வே, பவுண்டரி, சிக்சர் என விளாச, துபே தன் பங்கிற்கு சிக்சர் அடித்தார். கான்வே 37 வது பந்தில் அரைசதம் எட்டினார்.
தோனி 'சிக்சர்'
இந்நிலையில் பெர்குசன் பந்தில் துபே (42 ரன், 27 பந்து) போல்டாக, சிக்கல் ஏற்பட்டது. பெரிய எதிர்பார்ப்புடன் 5வது வீரராக களமிறங்கினார் தோனி.
பெர்குசன் வீசிய 18 வது ஓவரின் கடைசி இரு பந்தில் தோனி சிக்சர் அடிக்க, அடுத்த 12 பந்தில் சென்னை வெற்றிக்கு 43 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் கான்வே (69) 'ரிட்டயர்டு அவுட்' முறையில் வெளியேறினார். அர்ஷ்தீப் வீசிய 19 வது ஓவரில் தோனி, ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார்.
கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டன. யாஷ் தாகூர் வீசிய முதல் பந்தில் தோனி (27) அவுட்டாக, சென்னை தோல்வி உறுதியானது. மறுபக்கம் ஜடேஜா சிக்சர் அடித்த போதும், 9 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 201/5 ரன் எடுத்து, 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா (9), விஜய் சங்கர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் பந்தில் சிக்சர்
போட்டியின் முதல் ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில், பஞ்சாப்பின் பிரியான்ஷ் ஆர்யா சிக்சர் அடித்தார். இதையடுத்து பிரிமியர் அரங்கில் முதல் பந்தில் சிக்சர் அடித்த நான்காவது வீரர் ஆனார் ஆர்யா. முன்னதாக நமன் ஓஜா (2009, எதிர்-கோல்கட்டா), கோலி (2019ல் ராஜஸ்தான்), பில் சால்ட் (2024ல் மும்பை) இதுபோல அசத்தினர்.
39 பந்தில்...
பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, நேற்று 39 பந்தில் சதம் விளாசினார். பிரிமியர் அரங்கில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். முதலிடத்தில் யூசுப் பதான் (37 பந்து, 2010) உள்ளார். 3, 4, 5வது இடங்களில் மயங்க் அகர்வால் (45, 2020), இஷான் கிஷான் (45, 2025), முரளி விஜய் (46, 2010) உள்ளனர்.
* ஒட்டுமொத்த அரங்கில் கெய்ல் (30 பந்து, 2013), யூசுப் பதான், மில்லர் (38, 2013) 'டாப்-3' ஆக உள்ளனர். 4வது இடத்தை ஹெட் (39, 2024), ஆர்யா (39, 2025) பகிர்ந்து கொண்டனர்.
19 விக்கெட்
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட் சாய்த்த சென்னை பவுலர் ஆனார் அஷ்வின். இவர் 18 போட்டியில் 19 விக்கெட் சாய்த்துள்ளார். பிராவோ (15ல் 18 விக்.,), ஜடேஜா (23ல் 15), ஆல்பி மார்கல் (9ல் 12), ஷர்துல் தாகூர் (8ல் 12) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
54 ரன்
பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, நேற்று முதல் 6 ஓவரில் 53 ரன் (19 பந்து) எடுத்தார். இதையடுத்து 'பவர் பிளே' ஓவரில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர்களில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடத்தில் பேர்ஸ்டோவ் (59, 2022), ராகுல் (55, 2019), பிரப்சிம்ரன் (54, 2024) உள்ளனர்.
19 பந்து
நேற்று 19 பந்தில் அரைசதம் அடித்தார் பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா. 18வது பிரிமியர் சீசனில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் நிக்கோலஸ் பூரன் (18 பந்து, எதிர்-ஐதராபாத்) உள்ளார். நிதிஷ் ராணா (சென்னை), மிட்சல் மார்ஷ் (டில்லி), ஹெட் (ராஜஸ்தான், தலா 21 பந்து) அடுத்து உள்ளனர்.
* ஒட்டுமொத்த பிரிமியர் அரங்கில் ராகுல் (14 பந்து, 2018), நிக்கோலஸ் பூரன் (17, 2020), பிரப்சிம்ரன் (18, 2024) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா