சரவணம்பட்டியில் மேம்பாலப் பணி; 'மெட்ரோ' மேற்கொள்ள ஆலோசனை

கோவை; கோவை - சத்தி ரோட்டில், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டும் பணியை, 'மெட்ரோ ரயில்' நிறுவனமே மேற்கொள்ள, ஆலோசித்து வருகிறது.

கோவை - சத்தி ரோட்டில் அம்மன் கோவிலில் துவங்கி, சரவணம்பட்டி வரை, 1,415 மீட்டர் துாரத்துக்கு, ரூ.80.48 கோடியில், மொத்தம், 31 துாண்களுடன், தலா, 7.5 மீட்டர் அகலத்துடன், நான்கு வழியாக மேம்பாலம் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.

சத்தி ரோட்டில் 'மெட்ரோ ரயில்' இயக்குவதற்கான திட்ட அறிக்கை பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால், மேம்பால பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சூழலில், முதல்கட்டமாக, டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை நிலம் கையகப்படுத்த, 'சர்வே' பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.

அதன்பின், டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத்துறை செய்ய இருக்கிறது.

இதே சத்தி ரோட்டில், வலியாம்பாளையம் பிரிவு வரை, 14.4 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' இயக்க முடிவு செய்துள்ளதால், மேம்பாலம் கட்டுவது தொடர்பாக, 'மெட்ரோ ரயில்' நிறுவனத்தினருடன் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசித்தனர். சத்தி ரோட்டின் மையப்பகுதியில், 'மெட்ரோ ரயில்' செல்லும் வகையில் வழித்தடம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் தளத்தில், வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம், இரண்டாவது தளத்தில் ரயில் செல்லும் வகையில் துாண்கள் அமைக்க, முடிவு செய்யப்பட்டது.

மேம்பாலப் பணி செய்வதாக இருப்பின், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) வழங்க வேண்டும். மெட்ரோ தரத்துக்கு துாண்கள் இருப்பதை உறுதி செய்ய, மெட்ரோ அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். எனவே, மேம்பாலப் பணியையும், 'மெட்ரோ' நிறுவனமே சேர்த்து மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தொகையை, மெட்ரோ நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

பேச்சு நடக்கிறது

இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, 'சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்ட, 'மெட்ரோ' நிறுவனம் என்.ஓ.சி., வழங்கவில்லை. வழித்தட 'டிசைன்' இறுதியானதும், நம்முடைய பங்களிப்பு தொகையை செலுத்த அறிவுறுத்துவர். டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, தொகையை பெற்றுக் கொடுப்போம். தற்போதுள்ள சூழலில், இரு துறைகளுக்குள் பேசி வருகிறோம்' என்றனர்.

Advertisement