திசை மாறியது காற்றழுத்த தாழ்வு; கனமழை எச்சரிக்கை 'வாபஸ்'

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தாலும், அதன் நகர்வு திசை மாறியதால், கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது.


இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பி. அமுதா கூறியதாவது: தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், நேற்று முன்தினம் காலை, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த, 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு, வடமேற்கு திசையில், மத்திய மேற்கு திசையில் நகரும்.


அதன்பின், வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வந்து, பின் படிப்படியாக வலு குறைந்து விடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேநேரம், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


காற்றழுத்த தாழ்வு பகுதி திசை மாறியதால், நேற்று வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த, கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


நேற்று மாலை நிலவரப்படி, சேலம் மற்றும் வேலுாரில் அதிகபட்சமாக, 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம்; ஈரோடு, திருப்பத்துார் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

Advertisement