ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு துவக்கம்

புதுச்சேரி : ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிறுநீரகவியல் வெளிப்புற சிகிச்சை புதிய பிரிவை, மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் நேற்று துவக்கி வைத்தார்.

மகளிர் சிறப்பு மருத்துவர் வல்சா டயானா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் சுதாகர் சிறப்புரை ஆற்றினர். மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ரொசாரியோ உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வெளிப்புற சிகிச்சை பிரிவு வாரந்தோறும் செவ்வாய் கிழமையில், 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கும். இங்கு, சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்களிடம் பெண்கள் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறலாம்.

தொடர்ந்து மருத்துவ கருத்தரங்கு நிகழ்ச்சியில், மருத்துவமனையில், பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு உதவி புரிவதற்கு பயற்சி அளிக்கப்பட்டது.

Advertisement