விதை நெல் விற்பனைக்கு தயார்

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போகத்திற்கு தேவையான விதை நெல் விற்பனைக்கு தயாராக இருப்பதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல், திருப்தியான விலை என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வரும் ஜுனில் முதல் போக சாகுபடி பணிகள் துவங்கும்.

கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆர்.என்.ஆர் மற்றும் கோ 55 என இரண்டு ரகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆர்.என்.ஆர் ரகம் ஏக்கருக்கு 20 கிலோவும், கோ 55 ரகம் எக்டேருக்கு 50 கிலோ வழங்கப்படும். ஆர். என். ஆர். ரகத்திற்கு கிலோவிற்கு மானியம் ரூ.17.50 ம், கோ 55 ரகம் கிலோவிற்கு ரூ.20.50 மானியமாக வழங்கப்படும்.

மானியம் தொடர்பான உத்தரவுகள் சில நாட்களில் வந்து விடும் என்றும், விவசாயிகள் விதை நெல் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் துணை அலுவலர் குணசேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement