மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் சுற்றுலாவின் சொர்க்க பூமியாக திகழும்

கம்பம் : மேகமலையில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறை கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. கெடுபிடி நியாயமானதாக இருந்தாலும், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறும் செய்வதில்லை.

மாலை 5 மணியுடன் ஹைவேவிஸ் ரோடு மூடப்படுவதால், அதற்குள் திரும்பிட அறிவுறுத்துகின்றனர். மேகமலையில் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதிக்க வனத்துறை பரிசீலித்து வருவதாக சில ஆண்டுகளாகவே தகவல்கள் உள்ளன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த சூழல் சுற்றுலா இருக்கும் என்றும், இங்கு உட்கார இருக்கைகள், பூங்கா, பயணம் செய்ய பேட்டரி கார்கள், மணலாறு அணையில் படகு சவாரி, ஓட்டல், தங்கும் விடுதி, டிரக்கிங் என பல வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

அவ்வாறு செய்தால் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு இணையாக இங்கு வருவார்கள். தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருப்பது போன்று சூழல் சுற்றுலாவை இங்கு செயல்படுத்தலாம்.

ஏற்கெனவே தமிழக அரசு மேகமலையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.

இருந்தபோதும் புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சுற்றுலா நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வனத்துறை கூறுகிறது. எனவே மேகமலை சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் மூலம் மேகமலை சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சொர்க்க பூமியாக மேகமலை திகழும்.

Advertisement