கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

1


சென்னை: கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் (ஏப்ரல் 09), நாளையும் (ஏப்ரல் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று (ஏப்ரல் 08), தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலவுகிறது.


இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலு குறையக்கூடும்.



இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று(ஏப்.09) முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் படிப்படியாக உயரக்கூடும்.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement