உயிருடன் இருந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு

1

விழுப்புரம்:உயிருடன் இருந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 40. இவர், விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

ஒரு வாரம் முன், புதுச்சேரி, அரியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், மருத்துவமனை நிர்வாகத்தினர், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

பிரகாஷ் இறந்துவிட்டதாகவும், உடலை வீட்டிற்கு எடுத்து வருவதாகவும் கிராமத்தில் தகவல் பரவியது. உறவினர்கள் ஒன்று கூடினர். உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது முதல் வீட்டு முன் பந்தல் போடுவது, பிரிசர் பாக்ஸ், அடக்கம் செய்வதற்கான சடங்கு பொருட்கள், மாலைகள் வாங்கி, மேள, தாளம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு பள்ளம் தோண்டுவது வரை இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதற்கிடையே, ஆம்புலன்சில் அழைத்து வரபட்ட பிரகாஷை உறவினர்கள் இறக்கியபோது, அவர் கண் விழித்து, கை, கால்களை அசைத்தார். அவர் உயிரோடு இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

காணை போலீசார், தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தனர். இதில், உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியதாகவும், உறவினர்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement