ரூ.9 கோடி மதிப்புள்ள 900 கார் இயந்திரங்கள் திருட்டு: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

2

அமராவதி: ஆந்திராவில் கியா கார் நிறுவனத்தில் 5 ஆண்டுகளில் ரூ.9 கோடி மதிப்புள்ள 900 கார் இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றான கியா, அதன் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரத்திற்கு அருகே செயல்பட்டு வருகிறது.

இங்கு, சிறிது, சிறிதாக, தொடர்ந்து 900 கார் இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு இயந்திரத்தின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மார்ச் 19 அன்று உள்ளூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இந்த தொடர் திருட்டுகள் 4 முதல் 5 ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டும், இங்கிருந்து எடுத்து செல்லப்பட்ட இயந்திரங்கள், மற்ற நகரங்களுக்கு விற்பனைக்காகவோ அல்லது அசம்பிள் செய்யவோ மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எடுத்துச்செல்லப்பட்ட அந்த இயந்திரங்கள், கிட்டத்தட்ட 1,35,000 கிலோவாக இருக்கும், ஒவ்வொரு இயந்திரமும் சுமார் 150 கிலோ எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த கால மற்றும் தற்போதைய ஊழியர்கள் விசாரிக்கப்படுவார்கள். இவ்வளவு பெரிய அளவிலான முறைகேடு இவ்வளவு காலமாக கவனிக்கப்படாமல் எப்படி இருந்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள, சி.சி.டி.வி காட்சிகள், தளவாட பதிவுகள் மற்றும் ஊழியர்களின் நடமாட்ட பதிவுகளை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக, மூன்று குழுக்களை அமைத்துள்ளோம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Advertisement