பிரிமீயர் லீக் கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி


ஆமதாபாத்: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ரன்கள் 58 வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்றது.


பிரிமீயர் லீக் -2025 தொடரின் இன்றைய லீக் போட்டி இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதின. குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது,

பேட்டிங்கில் களம் இறங்கிய குஜராத் அணி கேப்டன் கில், வெறும் 2 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார், இதைத் தொடர்ந்து, முதல் 6 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 36 ரன்களில் தீக்ஷானா பந்தில் அவுட்டானார்.

இருவரும் சேர்ந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். நடப்பு தொடரில் அவருக்கு இது 3வது அரைசதமாகும். தொடர்ந்து, தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். ஷாருக்கான் 20 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்த போது தீக்ஷானா பந்தில் அவுட்டானார். அதிரடி வீரர் ரூதர்போர்டு (7) அவுட்டானார். களத்திற்கு வந்த வீரர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால், அந்த அணி 200 ரன்களை கடந்தது.

19வது ஓவரை வீசிய ராஜஸ்தான் வீரர் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன் (82), ரஷித் கான் (7) ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இறுதியில், திவாதியா 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. தீக்ஷானா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஆர்ச்சர் சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் சிம்ரன்ஹட்மர் 52 ரன்களி்ல் ஆட்டமிழந்தார், சஞ்சுசாம்சன், 41 ரன்களிலும், தொடர்ந்து யாஷ்வந்த் ஜெயிஸ்வால் 6 ரன்களிலும், நிதீஷ் ராணா 1 ரன்களிலும், பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
குஜராத் அணியில் பிரதீஷ் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement