சாயல்குடியில் 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் நிறுத்தம்

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன.

25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு 15 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

திருச்சி அருகே முத்தரசநல்லுாரில் உள்ள பெரிய கிணற்றில் இருந்து நேரடியாக பிரதான குழாய் வழியாக சாயல்குடிக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 லட்சம் லி., கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட 3 தொட்டிகள், 30 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 7 தொட்டிகள் என 13 குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சாயல்குடியை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:

சாயல்குடி பேரூராட்சியில் காவிரி குடிநீர் 15 நாட்களாக வராததால் குடம் ரூ. 10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காவிரி குடிநீர் ஒப்பந்த பராமரிப்பாளர் கூறியதாவது:

மோட்டார் மூலமாக பம்பிங் செய்யக்கூடிய இடத்தில் இரண்டு புதிய உயர்திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவற்றில் பழுது ஏற்பட்டுஉள்ளதால் அவற்றை பராமரிப்பு செய்து மீண்டும் தண்ணீர் சப்ளை செய்யும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களுக்குள் சாயல்குடி பேரூராட்சி முழுவதும் தண்ணீர் வினியோகம் தங்கு தடையின்றி நடக்கும் என்றார்.

Advertisement