அரை வைத்தியராகப் போகிறது ஆப்பிள் வாட்ச்!

மிக நேர்த்தியான கருவிகளை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவை வீட்டு மருத்துவராக ஆக்க ஆயத்தமாகி வருகிறது. அண்மையில், ஒரு பெரிய உணரிகள் தொகுப்பைக் கொண்ட ஆப்பிள் வாட்ச்சின் மாதிரிப் படம் இணையத்தில் கசிந்தது. அந்த உணரிகள் எதற்கு என்று பலரும் தோண்ட ஆரம்பித்ததும், ஆப்பிளின் 'புராஜக்ட் மல்பெர்ரி' பற்றிய தகவல்கள் தெரியவந்தது. ஏற்கனவே, ஆப்பிள் தனது ஐபோன்களில், நடை வேகத்தை அளக்கும் பெடோமீட்டரிலிருந்து, சில உடல் நல செயலிகள் வரை அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது, ஆப்பிளின் 'ஹெல்த் ஆப்', இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு, எரிக்கப்பட்ட கலோரிகள் போன்ற அளவீடுகளின் சேகரிக்கும் டிஜிட்டல் பெட்டியாக உள்ளது. ஆனால், இந்த தரவுகளை வைத்து என்ன செய்வது என்பதை ஆப்பிள் சொல்லவில்லை. இப்போது, ஆப்பிள் வாட்ச்சில் இந்த மர்மமான சென்சார்களை வைத்திருப்பதன் மூலம், சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்கி, பயனர்களை ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுக்கு தூண்ட ஆப்பிள் திட்டமிடுவது தெரிய வந்துள்ளது.

இதற்கு, ஹெல்த்+ என்ற செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியைப் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிடுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவுக்கு, நிஜ மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. அந்த வல்லுநர்களையே விளக்க வீடியோக்களை உருவாக்கவும் ஆப்பிள் விரைவில் நியமிக்கலாம்.

அடுத்த இரு மாதங்களில் வருடாந்திர செயல்விளக்க கூட்டத்தை ஆப்பிளின் தலைவர் டிம் குக் நடத்தவிருக்கிறார். அதில், ஆப்பிள் வாட்ச்சை, செயற்கை நுண்ணறிவு கொண்ட தனிநபர் உடல் நலக் கருவியாகவும், உடற்பயிற்சி வழிகாட்டியாகவும் முன்வக்கப் போகிறார் என ஆப்பிள் வல்லுநர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தினால், யாரும் இந்த மணிக்கட்டு டாக்டர் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகமாட்டார்கள் என ஆப்பிள் நம்புகிறது.

Advertisement