தமிழக பா.ஜ., தலைவர் யார்: வெளியானது அறிவிப்பு

88

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், நாளை(எப்.,11) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும் நடக்க உள்ளது.


கடந்த சில நாட்களாக, பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இதன் பிறகு, புதிய தலைவர் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இச்சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார். இதனால் புதிய மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுதும் உள்ள பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.


இந்நிலையில், பா.ஜ., மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது:கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவின் இறுதிக்கட்டத்தை நாம் அடைந்து உள்ளோம். கிளை துவங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. மனுக்களை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


நாளை (ஏப்.,11) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'F' பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பரிந்துரைக்க வேண்டும்.


தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'E' பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி உடன் அண்ணாமலை சந்திப்பு



சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Advertisement