இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ராகுல் கேட்ட 3 கேள்விகள்

புதுடில்லி: '' இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக பிரதமரிடம் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு, வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இந்த திட்டம் அறிவித்து ஓராண்டு நிறைவு பெற்றும், அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்கவில்லை. இதனால், இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி திரும்பி வந்துவிட்டது. வேலைவாய்ப்பின்மையை பிரதமர் மோடி எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார் என்பதற்கு இது சாட்சி.
பெரிய நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலமும், நியாயமான வணிகங்களை விட கூட்டாளிகளை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியாவின் பூர்வீக திறன்களை புறக்கணிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.
சிறுகுறு தொழில்களில் அதிக முதலீடு, நியாயமான சந்தை, உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி மூலமே, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
பிரதமர் மோடி 3 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
1. பிரதமர் அவர்களே, நீங்கள் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தீர்கள். ஆனால், இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் எங்கே மறைந்துவிட்டது. உங்கள் வாக்குறுதிகளுடன் நமது வேலையற்ற இளைஞர்களையும் கைவிட்டு விட்டீர்களா
2. நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய முழக்கங்களை உருவாக்கும்போது, நமது இளைஞர்கள் இன்னும் உண்மையான வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதியான திட்டம் என்ன?இதுவும் மற்றொரு வெற்று வாக்குறுதியா?
3. அதானி மற்றும் உங்கள் கோடீஸ்வர நண்பர்களை வளப்படுத்துவதில் இருந்து விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதில் உங்கள் கவனத்தை எப்போது மாற்றுவீர்கள்?இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
பா.ஜ., பதில்
இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ.,வின் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராகுலுக்கு, அவரது குழுவினர் உண்மையை விளக்க தவறி விட்டார்களா? அல்லது அவர் தனது அடையாளமான அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தி இந்திய இளைஞர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறாரா? உண்மையை திரித்து, அறியாமை என்ற போர்வையில் தவறான தகவல்களை பரப்புவது ஒரு திட்டமிட்ட யுக்தி.
இளைஞர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அரசு ஏன் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க தவறிவிட்டது என்பதைப் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். குடும்ப உறவுகளை பற்றி இவ்வளவு அக்கறை கொண்ட ஒருவருக்கு, மோசடி, ஊழல் மற்றும் கொள்கை முடக்கம் என்ற காங்கிரசின் வரலாறுகள் மறந்து போயிருக்கலாம்.
இந்திய இளைஞர்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். வாக்குறுதியை நிறைவேற்றும் ஆட்சிக்கும், வாரிசு அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அமித் மாளவியா கூறியுள்ளார்.







மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் பவுலிங்
-
அமெரிக்காவில் கார் மோதிய விபத்து; பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவி பரிதாப பலி
-
ஆந்திராவில் வெறுங்கால்களுடன் நடந்த பெண்கள்: ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு