யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு

1

புதுடில்லி: ரூ.2 ஆயிரத்திற்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரூ.2 ஆயிரத்திற்கு மேல் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி விதிக்க பரிசீலனை நடப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது. ஆதாரம் அற்றது. அப்படி எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை.


யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. யுபிஐ பயன்பாட்டை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் கடந்த 2021-22 ம் நிதியாண்டு முதல் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தளவு பணப்பரிமாற்றம் செய்பவர்கள், சிறுவணிகர்கள் பயனடைவதுடன், டிஜிட்டல் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது.


இந்த ஊக்குவிப்பு திட்டம், யுபிஐ மூலம் நடக்கும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை காட்டுகிறது.

இதற்காக
2021-22 ம் நிதியாண்டில் - ரூ.1,389 கோடியும்

2022- 23ம் நிதியாண்டில் - ரூ.2,210 கோடியும்

2023 -24ம் நிதியாண்டில் - ரூ.3,631 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் மூலமான பரிமாற்றம் நாட்டில் ஊக்கம்பெற்றுள்ளது.


2024ம் ஆண்டில் ஆய்வுகளின்படி, சர்வதேச அளவிலான டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இந்தியாவின் பங்கு 49 சதவீதம் ஆகும்.

2019 - 20ம் நிதியாண்டில் ரூ.21,3 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 2025 மார்ச் மாத முடிவில் ரூ.260.56 லட்சம் கோடியாக உள்ளது. தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு செய்யும் பணப்பரிமாற்றம் ரூ.59.3 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement