நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடு: விவசாயிகள் மனு

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கோட்டாட்சியர் தீபா தலைமையில் நேற்று நடந்தது. இதில், வருவாய், வேளாண், வனத்துறை, கால்நடை உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனமயமாக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்தும், சட்டசபை கூட்டத்தொடரில் ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஏரியின் நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வேண்டும்.

திருத்தணி கோட்டத்தில், தற்போது செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளன. ஒரு மூட்டைக்கு, 50 ரூபாய் என, கட்டாய வசூலில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

தச்சூர்- - சித்துார், திருப்பதி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரி- - திண்டிவனம் புதிய ரயில் பாதை ஆகியவற்றிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின், கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Advertisement