'பீக் ஹவர்' வேளைகளில் குடிநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு காவல் துறை அதிரடி அறிவிப்பு

சென்னையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில், 'பீக்ஹவர்' நேரங்களில், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், குடிநீர் லாரிகளுக்கு மட்டும், சில வழித்தடங்களில், குறிப்பிட்ட நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில், மாற்று வழித்தடங்களை போலீசார் மண்டல வாரியாக அறிவித்துள்ளனர்.

இதில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்துார் ஆகிய ஆறு மண்டலங்களில் குடிநீர் வாரிய லாரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

திரு.வி.க.,நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், தற்போதைய குடிநீர் லாரிகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

பீக்ஹவர் நேரங்களில் மட்டும் புதிய வழித்தடங்களில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, திரு.வி.க.நகர்., மண்டலத்தில் பேப்பர் மில்ஸ் சாலையில் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு இருந்து ராஜமங்கலம் ஜங்ஷன் - ரெட்டேரி மேம்பாலம், ஆர்.டி.ஓ.,ஜங்ஷன் - சர்வீஸ் சாலை வழியாக செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணாநகர் மண்டலத்தில் நியூ ஆவடி சாலையில் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை - கே.ஜி.,சாலை - ஹார்லிஸ் சாலை - ப்ளவர்ஸ் சாலை - ஈ.வி.ஆர்.,சாலை - கெங்கு ரெட்டி சுரங்கப்பாலம் வழியாக செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி, குடிநீர் வாரிய லாரி ஓட்டுனர்கள் அனுமதிக்கப்பட்ட சாலையை தவிர மாற்று சாலையை பயன்படுத்துகின்றனர என்பதை கண்டறிய, வாரிய அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர்.

அக்குழுவினர் லாரி ஓட்டுனர் மாற்றுப்பாதையில் சென்றால், உடனடியாக ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவர்.
- நமது நிருபர் -

Advertisement