உழவர்சந்தை விவசாயிகளின் காய்கறிகள் 'டோர் டெலிவரி'; எப்.பி.ஓ.,க்களை பயன்படுத்தலாமே

மதுரை: மதுரை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (எப்.பி.ஓ.,) மூலம் உழவர்சந்தை விவசாயிகளின் காய்கறிகளை 'டோர் டெலிவரி' செய்தால் விவசாயிகள் கூடுதல் பலன் பெறுவர்.

மதுரையில் 7 உழவர் சந்தைகளில் 617 கடைகள் மூலம் மதுரை மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்கள் நேரடியாக பொதுமக்களிடம் விற்கப்படுகிறது. நகர்ப்பகுதியில் சொக்கிகுளம், அண்ணாநகர், ஆனையூர், பழங்காநத்தம் உழவர் சந்தைகளில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலுார் உட்பட 7 உழவர் சந்தைகள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 37ஆயிரத்து 820 விவசாயிகள், 62 லட்சத்து 93 ஆயிரத்து 139 நுகர்வோரும் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் அந்தந்த தாலுகாக்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு, நிறுவனங்கள் (எப்.பி.ஓ.,) செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் எப்.பி.ஓ., க்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் நேரடியாகவும் மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் உழவர் சந்தை விவசாயிகளின் காய்கறி, பழங்கள் உட்பட விளைபொருட்களை பொதுமக்களுக்கு ஆன்லைன் விற்பனை மூலம் 'டோர் டெலிவரி' செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதனை எப்.பி.ஓ.,க்கள் மூலம் 'டோர் டெலிவரி' செய்தால் விவசாயிகள் கூடுதல் பயன்பெறுவர்.

Advertisement