நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

நாமக்கல்: 'நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, நாமக்கல் தெற்கு மாவட்ட, கொ.ம.தே.க., வர்த்தக பிரிவு செயலர் இளங் கோவன் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கொ.ம.தே.க., நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலரும், நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான மாதேஸ்வரனின் நற்பெயரை கலங்கப்படுத்தும் நோக்கத்தில், மாவட்டம் முழுதும் மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கடந்த, 9ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், பொட்டணம் கிராமத்தில் உள்ள, எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில், மர்மமான முறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில், அவரது தாயார் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாமக்கல் எம்.பி., குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், தகவல்களை வெளியிட்டு வரும் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். எம்.பி., மாதேஸ்வரனுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement