தொடர் முற்றுகை போராட்டம் மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு 

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 22ம் தேதி முதல், கோட்டையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக, மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தலைவர் வில்சன், பொதுச்செயலர் ஜான்சிராணி ஆகியோர் கூறியதாவது:

ஆந்திராவை போல, மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகை, 6000 ரூபாய், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என, உயர்த்தி வழங்க வேண்டும். ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாக, தமிழகத்தில் 18 வயதுக்குக் கீழ் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு வாயிலாகவே உதவித் தொகை வழங்கப்படும் என்ற நிலை உள்ளது.

எனவே, வயது வரம்பை நீக்கி, விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வாயிலாக மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

நுாறு நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை அட்டை வழங்குவதுடன், பணியும் வழங்க வேண்டும்.

மேலும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதி அடிப்படையில், வேலை நாட்களை, 125 நாட்களாக உயர்த்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, வரும், 22ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை எழிலகத்தில் துவங்கி, கோட்டை நோக்கி சென்று, தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement