ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி

2

விஜயவாடா: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.


ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச்சிதறின.


இச்சம்பவத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு ஆலை செயல்பட அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார்.

பிரதமர் இரங்கல்



இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனக்காப்பள்ளி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement