ஒல்லியானவங்க வெளியே வராதீங்க சூறாவளியால் சீன அரசு அதிரடி

பீஜிங்:சீனாவில் பலத்த சூறாவளி வீசுவதால், 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்ட நிலையில், உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் வீசிய சூறைக்காற்றால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனால், பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய, 838 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ரயில், பஸ் சேவையும் பாதிக்கப்பட்டன.
பீஜிங்கில் மட்டும், 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தன. வாகனங்கள், கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
வரும் நாட்களில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக, பூங்காக்கள், மக்கள் கூடும் பொழுதுபோக்கு மையங்கள், வரலாற்று தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
உடல் எடை, 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள், சூறாவளி காற்றால் துாக்கி வீசப்படக் கூடும் என்பதால், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி காற்று, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவின் மேல் பகுதியில் உருவான குளிர் சுழற்சி காரணமாக ஏற்பட்டதாகவும், சில நாட்கள் வரை நீடிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்
-
கேரளாவில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த பரிதாபம்
-
நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!