கோவிலின் மரபை மீறிய பக்தர்கள்; கேரளாவில் தந்திரிகள் கடும் எதிர்ப்பு

26

காசர்கோடு : கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலின் கருவறை முன் உள்ள அறைக்குள் நுழையக் கூடாது என்ற தடையை மீறி, கோவிலின் உள்ளே ஒரு பிரிவினர் நேற்று நுழைந்தனர்.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காசர்கோடு அருகே, ராயரமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபுப்படி, கோவிலில் வழிபட வருவோருக்கு, கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் நுழைய அனுமதியில்லை.


அந்த இடத்தில் கோவிலின் தந்திரிகள் மற்றும் சுவாமிக்கு பூஜை செய்வோர் மட்டுமே நிற்க முடியும். இதை அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சிலர் எதிர்த்தனர். அந்த தடையை விலக்கக் கோரி, கூட்டு போராட்டக்குழு துவக்கப்பட்டது. அந்த குழுவினர், கோவிலுக்குள் நேற்று நுழைந்தனர். கோவிலின் உள்முற்றம் இருந்த பகுதிக்குள் சென்று பத்ரகாளி அம்மனை வழிபட்டனர்.


முன்னதாக, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், கோவிலில் நீண்ட காலமாக பின்பற்றப்படும் மரபை மீற அனுமதிக்க முடியாது என, கோவிலின் தந்திரி மறுத்தார். எனினும், அவரின் தடையை மீறி, கோவிலின் கருவறைக்கு முன் உள்ள அறைக்கு பக்தர்கள் நேற்று சென்று, அம்மனை வழிபட்டனர்.


இது, கோவிலில் பின்பற்றப்படும் மரபுக்கு எதிரானது என, எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில் தந்திரிகள், இந்த விவகாரம் குறித்து, நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கூறியுள்ளனர்.

Advertisement