ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் 'க்ளோஸ்': சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

31


சென்னை: பெண் போலீஸ் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ்., அதிகாரி) சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக டி.ஐ.ஜி., அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். இவர் ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் டி.ஜி.பி., இடம் புகார் அளித்தார்.



மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தற்போது மகேஷ் குமார் (ஐ.பி.எஸ்., அதிகாரி) சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டது.


இதையடுத்து மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஏற்றுக் கொண்ட டி.ஜி.பி., தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.


இதன் அடிப்படையில், ''புகார் மீது மேலும் நடவடிக்கை தேவையில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது'' என உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Advertisement