'பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன் ?' கவுன்சிலர் கேள்வியால் அதிர்ச்சி

5


திருப்பூர் : ''பா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று சிறுபான்மையினருக்கு விளக்க வேண்டும்'' என, எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணீர் விட்டு அழுதார்.
திருப்பூரில், அ.தி.மு.க., 'பூத் கமிட்டி' அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

பகுதி செயலரும், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலருமான கண்ணப்பன் பேசுகையில், ''பா.ஜ., சிறுபான்மையினத்தோருக்கு எதிரா செயல்படுதுன்னு சொல்லித்தான், அக்கட்சி உறவை முறித்தோம். ஆனால், திடுமென மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

அ.தி.மு.க.,வில் ஏராளமான சிறுபான்மையினர் நிர்வாகிகளாகவும், உறுப்பினராகவும் உள்ளனர். அதனால், பா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்பதை கட்சி தலைமை விளக்க வேண்டும். அப்போது தான், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் ஆதரவு அ.தி.மு.க.,வில் தொடரும்,'' என கூறியவாறே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதைக் கண்டு பதறிப் போன முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவரை சமாதானப்படுத்தி விட்டு பேசினார்.

அவர் பேசுகையில், ''கடந்த முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தபோது, முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்போம் என்று உறுதி அளித்தோம்; அப்படியிருந்தும், முஸ்லிம்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இருந்தாலும், கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து, கட்சியில் இருக்கும் சிறுபான்மையினத்தவருக்கு தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.

மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் பேசுகையில், ''கூட்டணி வேறு; கட்சியின் சித்தாந்தம் வேறு. தேர்தல் வெற்றிக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

''அ.தி.மு.க., அனைத்து மதங்களையும் சார்ந்தது; அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்று, சிறுபான்மையின மக்களுக்கு விளக்கி வருகிறோம்,'' என்றார்.


எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் கவுன்சிலர் கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement