தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!

55

சென்னை: ''டில்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை,'' என நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இன்று சட்டசபை கூடியதும் இது குறித்து விவாதம் எழுந்தது.



சட்டசபையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: சட்டசபை விதி 72ன் கீழ், அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளோம். இது குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு, ''சபாநாயகர் அனுமதி அளித்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்'' என துரைமுருகன் கூறினார்.


பின்னர் விதியின் கீழ், நம்பிக்கையில்லா தீர்மானம் எனது பரிசீலனையில் இருக்கிறது என சபாநாயகர் பதில் அளித்தார். அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்ததை கண்டித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசியது கண்டனத்திற்குரியது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய பிரச்னைகள் குறித்து பேச எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி தருவதில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து, நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள். தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.


அமித் ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என கூறியதாக நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, இ.பி.எஸ்., அளித்த பதில்: கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. நீங்கள் ஏதோ தப்பாக புரிந்து கொண்டு ஏதோ வித்தை காட்டுக்கிறீர்கள். இந்த வித்தையை எல்லாம் விட்டுருங்க.


அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, ஆட்சி அமைக்கும். அதை புரிந்து கொள்ளுங்கள். டில்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். இதில் ஏதே விஞ்ஞான மூளையை எல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுருங்க, நாங்கள் பார்த்து கொள்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement