அக் ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க நகை கடைகளில் புதிய முறை அறிமுகம்

சென்னை : தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, நகைக்கடைகள் அறிமுகம் செய்துள்ள புதிய முறைப்படி, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற சுப தினங்களில் தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை, பெரும்பாலான மக்களிடம் உள்ளது.
இதனால், அந்த தினங்களில் பலரும் தங்கம் வாங்கி வருகின்றனர். மொத்த பணமும் கொடுத்து நகை வாங்க முடியாதவர்கள், மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பணம் செலுத்தி வருகின்றனர்.
இது போன்ற விசேஷ தினங்களுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன் கடைக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, சேமிப்பு பணத்துடன் சேர்த்து கூடுதலாக செலுத்தி முன்பதிவு செய்வர். பின், அக் ஷய திருதியைக்கு சென்று நகையை வாங்குவர்.
பொதுவாக, தங்கம் விலை சவரனுக்கு ஆண்டுக்கு, 3,000 - 4,000 ரூபாய் வரை அதிகரித்து வந்தது. இந்தாண்டு துவங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சற்று குறைந்திருந்த விலை, மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,755 ரூபாய்க்கும், சவரன் 70,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது. வரும் 30ம் தேதி அக் ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.
இந்தச் சூழலில், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுவதால், வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா அல்லது இன்னும் உயருமா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதனால், பல நகைக்கடைகள், அக் ஷய திருதியை முன்பதிவுக்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்கியோர், முன்கூட்டியே நகைக் கடைகளுக்கு வந்து, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, மொத்த பணமும் செலுத்தி முன்பதிவு செய்தனர்.
தற்போது, தங்கம் விலை யில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. அதனால், தற்போது அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்ய வருவோர், விரும்பிய நகைகளை தேர்வு செய்து, 10 சதவீத தொகையை முன்பணமாக செலுத்தி, முன்பதிவு செய்கின்றனர்.
அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்திருந்த தினத்தில் இருந்து அக் ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு அக் ஷய திருதியை நாளில் நகை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்