ரூ.13,000 கோடி மோசடி செய்த சோக்சி சிக்கினார்! பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்

புதுடில்லி: வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, 65, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அவரை, இந்தியா அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர்.
அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.
கைது வாரன்ட்
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி வழக்கு தொடுத்துள்ளார்.
மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, வட அமெரிக்காவில் உள்ள தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். அவர், ஏற்கனவே அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதை உறுதி செய்த மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் முயற்சியை துவங்கியது.
சோக்சிக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் பிறப்பித்த தடை உத்தரவு இரு ஆண்டுகளுக்கு முன் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பயணம் செய்வதில் சோக்சிக்கு சிக்கல் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதை தெரிந்து கொண்ட மத்திய அரசு, சோக்சிக்கு எதிராக, 2018 மற்றும் 2021ல் மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு கைது வாரன்ட் நகல்களை பெல்ஜியம் போலீசாருக்கு சமீபத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.
அவர் ஜாமின் கோர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மெஹுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:
ஜாமின் மனு செய்யும் நடைமுறை பெல்ஜியத்தில் இல்லை. அங்கு மேல்முறையீடு செய்வதே வழக்கம்.
உடல்நல பாதிப்பு
அந்த மேல்முறையீட்டின் போது, அவரை காவலில் வைக்கக் கூடாது என்றும், காவலில் இல்லாத நிலையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நாடு கடத்தும் கோரிக்கையை எதிர்க்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படும்.
அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதால், கடுமையான உடல்நல பாதிப்புடன் உள்ளார். அவரால் பயணம் செய்ய முடியாது என்ற அடிப்படையில் நாடு கடத்தக்கூடாது என, கோரிக்கை வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெல்ஜியத்தில் இருந்து, மனைவி ப்ரீத்தி உடன் சுவிட்சர்லாந்து தப்பிச் செல்ல மெஹுல் சோக்சி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: நம் நாட்டில் குற்றம் செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகள் எல்லாம் ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர்; இது, நம் பிரதமர் மோடி பின்பற்றி வரும் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி. வெளிநாடுகளுடன் சுமுகமான, வெற்றிகரமான உறவை நாம் வைத்திருப்பதால் தான், இதுபோன்ற விஷயங்கள் சாத்தியமாகின்றன. வங்கியில் மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி சிக்கியது, நமக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'