சாலை மறியலில் ஈடுபட திரண்ட மீனவ பெண்கள் செஞ்சி சாலையில் திடீர் பரபரப்பு

புதுச்சேரி: செஞ்சி சாலையில் மீனவ பெண்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தெற்கு பகுதியில் 80 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் நுாலகம், குழந்தைகளுக்கு பார்க், மீன் வலை உலர்த்தும் கூடம் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த இடம் ேஹாம் ஸ்டே என்ற பெயரில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடத்தினை மீட்டு அரசு உறுதியளித்தப்படி நுாலகம், பார்க், மீன் வலை உலர்த்தும் கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வைத்திக்குப்பம் மீனவ பெண்கள் நேற்று மாலை 4 மணியளவில் செஞ்சி சாலை ஜிப்மர் கிளை மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வந்த முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மீனவ பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நுாலகம், மீன் வலை உலர்த்தும் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தார். அதை ஏற்று மீனவ பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெண்கள் மட்டுமே திரண்டது ஏன்?

மீனவ பெண்கள் கூறும்போது, இந்த இடத்திற்காக போராடிய ஒருவர் மர்மான முறையில் இருந்தார். இதனால் தான் பாதுகாப்பு கருதி ஆண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்; பெண்கள் மட்டுமே பங்கேற்கின்றோம் என்று சொல்லிவிட்டோம். என்று பகீர் தகவலை பகிர்ந்தனர்.

Advertisement