பழைய கஸ்டம்ஸ் சாலையில் உடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? மோட்டார் வாகனங்கள் ஆபத்தான பயணம்

கடலுார்; பழைய கஸ்டம்ஸ் சாலையில் வெள்ளப்பாக்கம் அருகே உடைந்த பாலம் சீரமைக்கப்படாமல் இருப்பதால் கனரக வாகங்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடலுார் ஆல்பேட்டையில் இருந்து, தென் பெண்ணையாறு கரையோரம் செல்லக்கூடிய பழைய கஸ்டம்ஸ் சாலை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இந்த சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பெண்ணையாற்று கரையில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடலுாரில் இருந்து பண்ருட்டி, வழியாக செல்லாமல் கண்டரக்கோட்டை வழியாக விழுப்புரம் செல்லக்கூடியது.
கடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாக விழுப்புரம் செல்ல 1.30 மணி நேரமும், சொர்ணாவூர் வழியாக செல்ல 1.40 மணி நேரமும் ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக புதிதாக பழைய கஸ்டம்ஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பயண நேரத்தை குறைப்பதற்கும், போக்கு வரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்கும், 10 கி.மீட்டர் குறைவாக புதிதாக பழைய கஸ்டம்ஸ் சாலை மேல்பட்டாம்பாக்கம் வரை அமைக்கப்பட்டது.
கடலுார் தென் பெண்ணையாற்று கரையில் இருந்து துவங்கும் இந்த சாலை பண்ருட்டி வி.கே.டி., சாலையில் உள்ள கண்டரக்கோட்டை பாலம் அருகே இணைகிறது. பெண்ணையாற்றின் கரையோரத்திலேயே செல்லும் இந்த சாலையின் முதல் கட்டப்பணியில் கடலுார் ஆல்பேட்டையில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டதோடு சரி. இந்த சாலை வழியாக செல்வோர் மீண்டும் மேல்பட்டாம்பாக்கம் சென்று பண்ருட்டி சாலையில் இணைய வேண்டும்.
இதனால் சாலை அமைத்தும் மக்களுக்கு முழுமையாக பயன்படவில்லை. சாலையிலும் மிக குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே செல்கிறது. 2ம் கட்ட சாலைப்பணி துவங்குவது தொடர்பாக இதற்கு முன்பு இருந்த கலெக்டர் மற்றும் சிறப்பு அதிகாரிகள் பல முறை கடலுாரில் ஆய்வுக் கூட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலை பல இடங்களில் சேதமடைந்தது. குறி்ப்பாக வெள்ளப்பாக்கம் அருகே சிறிய பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது.
மேலும் சாலை நெடுகிலும் கருவேல முள் மரங்கள் வளர்ந்து வாகனங்கள் செல்ல இடையூராக உள்ளது. இது போதாது என மாநகரத்தில் கிடைக்கக்கூடிய கழிவுப்பொருட்களை எல்லாம் சாலையில் வீசும் கொடுமை நடந்து வருகிறது.
எனவே சாலை சீரமைத்தால்தான் வாகனங்கள் அச்சமின்றி செல்ல முடியும். எனவே அதிகாரிகள் மீண்டும் விடுபட்ட சாலைப்பணியை போட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேலும்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
-
டாஸ்மாக் லஞ்சத்தின் சங்கிலித் தொடர் பின்னணி அறிந்து கொள்ள வேண்டாமா; அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்
-
காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு
-
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது