நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்

வாஷிங்டன்: மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் 200 பேரை அமெரிக்க நிறுவனம் பணி நீக்கம் செய்தது.
பெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் ( எப்.என்.எம்.ஏ ), எனப்படும் இந்நிறுவனம் பொதுவாக பேன்னி மே என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அடமான நிறுவனமான பேன்னி மே, அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.
நிறுவனங்களை ஏமாற்றவும் நிதியை தவறாகப் பயன்படுத்தவும் வட அமெரிக்க தெலுங்கு சங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததாக பல ஊழியர்கள் மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர், சங்கத்தின் பிராந்திய துணைத் தலைவராக இருந்ததாகவும், மற்றொருவர் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவரின் மனைவி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி.ஏ.என்.ஏ.,எனப்படும் தெலுங்கு வட அமெரிக்க சங்கம் மட்டுமின்றி பிற சங்கங்களும் விசாரணையில் உள்ளன.
பேன்னி மேயுடன் பணிபுரியும் சிலர், ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பணிநீக்கங்கள் செய்யப்பட்டதாகவும், அவை நெறிமுறை அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க காங்கிரசை சேர்ந்த சுஹாஸ் சுப்பிரமணியம் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் பணியாளர்கள் மீது குற்றம்சாட்டிய பேன்னி மே , முழு விசாரணையை நடத்தாமலோ அல்லது ஆதாரங்களை வழங்காமலோ அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பணி நீக்கம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேன்னி மே நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.
இந்த அமைப்பில் உள்ள ஊழியர்கள் பலருடன் நான் பேசியுள்ளேன் . அவர்களுக்கு உரிய நடைமுறை தேவை. பேன்னி மே அவர்களுக்கும், காங்கிரசுக்கும், அமெரிக்க மக்களுக்கும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சுஹாஸ் சுப்பிரமணியம் கூறினார்.





