திருநெல்வேலியும், அரிவாள் கலாசாரமும்

திருநெல்வேலி ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் வகுப்பறையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வெட்டிய மாணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரிவாள் கலாசாரம்:
நெல்லை மாவட்டத்தில், ஜாதி ரீதியான மோதல்கள், 1980ல் துவங்கின. பின் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் அளவிலும் நடந்து வருகிறது. கங்கைகொண்டான், கோபாலசமுத்திரம், நாங்குநேரி, களக்காடு வள்ளியூர் போன்ற பல்வேறு பள்ளிகளிலும், இத்தகைய மோதல்கள் நடந்துள்ளன. இதுவரையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே நடந்த மோதல், அரிவாள் வெட்டு சம்பவங்கள் முதன் முறையாக மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடந்துள்ளது.
நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் சின்னத்துரை, சக மாணவர்களால் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டதற்கு பிறகு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தென் மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டது. 2024 ஜூனில் அறிக்கையும் அளித்தது. அதில் பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி அடையாளங்களுக்கு தடை விதிக்க வேண்டும். பள்ளி பெயர்களில் ஜாதி இணைப்புகளை நீக்க வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி குறிப்புகள் இருக்கக் கூடாது. சமூக தீமைகளை எதிர்த்து போராடுவதற்காக தேசிய சேவைத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் நீண்ட காலம் ஒரே பகுதியில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்திருந்தது. அந்த ஆலோசனைகள் அமல்படுத்தப்படவில்லை.
கடந்தாண்டு நீதிபதி சந்துரு அறிக்கைக்கு பிறகு இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நீண்ட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஜாதி ரீதியான மோதலுக்கு மாணவர்களை தூண்டுபவர்கள் என கண்டறியப்பட்ட 47 ஆசிரியர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து அப்போதைய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஆனால், ஆசிரியர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டில் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்தனர். மீண்டும் பழைய இடங்களிலேயே பணியாற்றுகின்றனர்.
இரு ஆண்டுகளுக்கு முன், முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் அரசு பள்ளியில், மூன்று மாணவர்களால் மாணவர் செல்வசூர்யா கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மாணவர் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே ஜாதி ரீதியான போக்குகளால் ஏற்படும் வாழ்நாள் பாதிப்பு குறித்து மாணவர், பெற்றோருக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி