அரைகுறை திட்டங்களால் வீணாகும் அரசு பணம் உசிலம்பட்டியில் அவலம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அரசுத் திட்டங்கள் போதிய முன்னேற்பாடு இன்றி துவக்கப்பட்டும், பணிகளை அரைகுறையாக கிடப்பில் போடுவதாலும் திட்டத்தின் பயன்பாடுகள் மக்களுக்கு கிடைக்காமல், வரிப்பணம்தான் வீணாகிறது.

உசிலம்பட்டி நகராட்சிக்கு 2007 ல் புதிய அலுவலகக் கட்டடம் தேனி ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அதே பகுதிலேயே தொடர்ந்து குப்பையை கொட்டியதால், கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே போனது. இக்கட்டடத்தைச் சுற்றி 2021--22 நிதியாண்டில் மேலும் ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டினர். இவ்வாறு ரூ. ஒரு கோடி நிதி செலவிட்டும் எந்த பயனுமின்றி பணம்தான் வீணானது.

இதேபோல 2023ல், உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது. தொடர்ந்து ஒன்றியம் வசம் உள்ள சந்தை திடல் பகுதியை கையகப்படுத்தி, தற்போதுள்ள பஸ்ஸ்டாண்ட் பகுதியுடன் மேலும் ஒரு ஏக்கர் சேர்த்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்து பணிகளை துவங்கினர்.

சந்தை திடல் இடத்தை கையகப்படுத்தாமல், பழைய இடத்திற்குள்ளேயே பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணியை துவக்கி 2 ஆண்டுகளாகியும் பணி முழுமையடையவில்லை. இதனால் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்க இடமின்றி தற்காலிக பஸ்ஸ்டாண்ட், பேரையூர், வத்தலக்குண்டு செல்லும் ரோடுகளில் நின்று பஸ் ஏறுகின்றனர்.

தமிழ்ச்செல்வன் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டை புதுப்பிப்பதற்கு பதில் போக்குவரத்து இடையூறின்றி ஊருக்கு வெளியே புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் பழைய இடத்திலேயே ஒரு ஏக்கர் நிலம் சேர்த்து விரிவாக கட்டுவோம் எனக் கூறினர். அதற்கு போதுமான திட்டமின்றி, சந்தை திடல் நிலத்தை கையகப்படுத்தும் முன்பே தற்காலிக இடத்திற்கு பஸ்ஸ்டாண்டை மாற்றினர்.

இவ்வாறு 2 ஆண்டுகளாக கூடுதல் இடம் கையகப்படுத்த முடியாமலும், பணிகளும் முழுமையடையாமலும் கிடப்பில் கிடக்கிறது. பழைய பஸ்ஸ்டாண்டில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.

கூடுதலாக சந்தை திடலுக்குள் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டிய இடத்தில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது செயல்படுகின்றன. விரிவாக்கம் செய்தால் இந்த 500 கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றார்.

Advertisement