திருநங்கை, திருநம்பிகளை பெற்றோர் ஆதரிக்க வேண்டும்

மதுரை : ''திருநங்கையர், திருநம்பிகளை பெற்றோர்அரவணைத்தால் சமூகத்தில் ஏற்படும் சிக்கல் களையப்பட்டு மாற்றம் ஏற்படும்'' என தேசிய தின விழாவில் திருநங்கையர், திருநம்பி நல மைய இயக்குனர் பிரியாபாபு பேசினார்.

மதுரையில் நடந்த விழாவில் திருநங்கைகள் திட்ட மேலாளர் ஷாலினி வரவேற்றார். தலைமை வகித்த பிரியாபாபு பேசியதாவது: திருநங்கை, திருநம்பிகளிடம் பொருளாதார பிரச்னை ஏற்படுவதால் தவறான நிகழ்வுகள் நடக்கிறது. கல்வி கற்பதில், விடுதி கிடைப்பதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவர்கள் தங்குத் தடையில்லாமல் கற்பதற்கு அரசு கொடுக்கும் நிதியை உயர்த்தியும், தங்கும் விடுதிகளும் அமைக்க வேண்டும்.

அரசு சார்பில் சிறப்பு உதவி எண், ஆதார் கார்டில் திருநம்பி என்றும் சேர்க்க வேண்டும். பெற்றோர் அரவணைத்தால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறைந்து மாற்றம் ஏற்படும். சட்டசபையில் நியமன உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும் என்றார்.

சமூகநலத்துறை அலுவலர் திலகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை சுப்பிரமணியன், மதுரை ஸ்டார்ட்அப் திட்ட தலைவர் சக்திவேல் காளியப்பன், ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை டிரஸ்டி குருசாமி, வழக்கறிஞர் முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி பயிலும் திருநங்கையருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மனோகர் நன்றி கூறினார்.

Advertisement