சி.பி.எஸ்.இ., புத்தகங்களுக்கு ஹிந்தி பெயர் வைத்ததால் சர்ச்சை

சென்னை: இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்காக, என்.சி.இ.ஆர்.டி., நிறுவனம் வெளியிடும் ஆங்கிலவழி பாடப்புத்தகங்களுக்கு, ஹிந்தி பெயர்கள் வைக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், இரண்டாண்டுகளாக புதிய புத்தகங்களை வடிவமைத்து வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு, 4, 5, 7, 8ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை தயாரித்து வருகிறது. அதில், ஆங்கிலவழி பாடப்புத்தகங்களின் தலைப்புகள், ஹிந்தியில் வைக்கப்பட்டு உள்ளன.
இது, ஹிந்தி பேசாத மாநில குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று, குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது, 1, 2, 3ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு, இந்திய இசைக் கருவிகளான மிருதங், சந்துார், பூர்வி என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன; 7, 8ம் வகுப்பு ஆங்கில புத்தகங்களுக்கு, ஹிந்தி தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், 1, 2, 3, 7, 8ம் வகுப்பு புத்தகங்களுக்கு, 'ரோமன்' எண்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, அவை ஹிந்தி எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல, ஆங்கிலவழி கணித பாடப்புத்தகத்துக்கு, 'மேத்தமேடிக்ஸ்' என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, 'கணித பிரகாஷ்' என, மாற்றப்பட்டுள்ளது. அறிவியல் பாடப்புத்தகம் 'சயின்ஸ்' என்றிருந்த நிலையில், 'கியூரியாசிட்டி' என்று மாறியுள்ளது. அதேபோல, சமூக அறிவியல் பாடம், 'சோஷியல் சயின்ஸ்' என்றிருந்தது. தற்போது, 'இந்தியா அண்டு பியான்' என, மாறியுள்ளது.
இது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, கேரள பொதுக்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் வி.சிவன்குட்டி, 'தேசிய பாடத்திட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் ஆங்கிலவழி பாடங்களுக்கும், புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயரிடுவது, நாட்டின் பன்மொழி தன்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்' என்று, தெரிவித்துள்ளார்.
அதேபோல, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., வெங்கடேசன், 'ஆங்கிலவழி பாடநுால்களின் தலைப்புகளுக்கு ஹிந்தி; ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் ஹிந்தி; என்.சி.இ.ஆர்.டி., முதல் எம்.பி.,க்களுக்கான பதில் வரை எல்லாவற்றிலும் ஹிந்தி திணிப்பு' என்று பதிவிட்டுள்ளார்.





மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி