புதுச்சேரி காங்., தலைவருடன் எதிர்க்கட்சி தலைவர் திடீர் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரி காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,யை எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியை வலுவாக்க பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியோரை சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதேபோல் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.,காங்., கூட்டணியுடன் அமைச்சரவையில் பா.ஜ., இணைந்து செயல்பட்டு வருகிறது. இதே கூட்டணியே வரும் சட்டசபை தேர்தலிலும் நீடிக்கும் என, பாஜ.,வினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 1:00 மணியளவில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அலுவலகத்தில், எதிர்க்கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளருமான சிவா திடீரென சந்தித்து பேசினார்.

சந்திப்பின் போது தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த திடீர் சந்திப்பு குறித்து காங்., வைத்திலிங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், 'புதுச்சேரியில் மின்துறை பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை காப்பது குறித்து கலந்து பேசினோம்' என்றனர்.

ஆனால் காங்., தி.மு.க., வட்டாரங்களில் கூறுகையில், 'புதுச்சேரியில் காங்., தி.மு.க., கூட்டணியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் இரண்டு கட்சிகளிலும் ஆர்வமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

இதனால் யாருக்கு சீட்டு கிடைக்கும் என, தெரியாத நிலையில் இரண்டு கட்சிகளிலும் தேவையற்ற குழப்பங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்வது, சட்டசபை தேர்தலுக்கு புதுச்சேரியில் தற்போதே பணிகளை துவக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவித்தனர்.

Advertisement