கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்

1

சென்னை: போதைப்பொருள் கடத்தல் உலகின் தாதாவாக வலம் வரும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருவது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி மகேந்திரன் உட்பட எட்டு பேர், என்.ஐ.பி., - சி.ஐ.டி., எனப்படும் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகைன்' பறிமுதல் செய்யப்பட்டது.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இலங்கையை சேர்ந்தவர் கஞ்சிபாணி இம்ரான்; சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில், நிழல் உலக தாதா போல செயல்பட்டு வருபவர். கடந்த 2019ல், துபாயில் பதுங்கி இருந்த இவர், இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு சிறையில் இருந்து, 2023ல், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார்.


தற்போது அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருளை, கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவது தெரியவந்துள்ளது. அதற்காக, கடத்தலுக்கான நுழைவு வாயிலாக தமிழகத்தை பயன்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில், தன் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.


அவரது பிடியில் கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement