யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை : மதுரை யா.புதுப்பட்டி அரசு தொழுநோய் மையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மூகாம்பிகை தாக்கல் செய்த பொதுநல மனு: யா.புதுப்பட்டியில் அரசு தொழுநோய் மறுவாழ்வு மையம் உள்ளது. தொழுநோயாளிகளுக்கு புண்களை சுத்தம் செய்து மருந்திட்டு பேண்டேஜ் கட்ட வேண்டும். நோயாளிகளே அப்பணியை செய்கின்றனர். அப்பணிக்குரிய ஊழியர்கள் உதவி செய்வதில்லை. நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க போதிய சமையலர்கள் இல்லை. போதிய கழிப்பறை, மின்சார வசதி இல்லை.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். சமையலர், காப்பாளர், எலக்ட்ரீசியன், பிளம்பர், துாய்மை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு சுகாதாரத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement