அரகண்டநல்லுார் கமிட்டியில் 3 நாளில் ரூ.1.10 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எள் மற்றும் நெல் வரத்து அதிகரித்ததால் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

பெஞ்சல் புயலைத் தொடர்ந்து திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் ஏரி, குளங்கள் நிரம்பியது. இதன் காரணமாக சம்பா சாகுபடியை விவசாயிகள் காலம் தாழ்த்தி மேற்கொண்டனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் எள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

மேலும் 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எள் மற்றும் நெல் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நெல் 4,500 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எள் 200 மூட்டை கொண்டு வரப்பட்டது. ஒரு மூட்டை எள் சராசரி விலையாக 10 ஆயிரத்து 390 ரூபாய்க்கு விற்பனையானது.

390.2 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் நாட்களிலும் நெல் வரத்து சீரான அளவில் இருக்கும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.

Advertisement