சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

24

புதுடில்லி: '' சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை அனுமதிக்க முடியாது,'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது.


கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிராவில்,

சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டும் என்றே அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நிரிபேந்திர பாண்டே என்பவர் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதனை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதனை விசாரித்த திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் அமர்வு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மஹாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள்.


மஹாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை தொடர்பு கொண்ட போது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்ற குறிப்பிட்டது ராகுலுக்கு தெரியுமா? அவர்களை புகழ்ந்து, ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்த போது கடிதம் எழுதியது தெரியுமா


சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்து பொறுப்பு அற்றது. அவரை மஹாராஷ்டிரா மக்கள் போற்றுகிறார்கள். அவருக்கு எதிரான இழிவான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.


அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பாட்டால், நாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். மேலும் ராகுலின் மனு குறித்து பதிலளிக்கும்படி உ.பி., அரசு மற்றும் நிரிபேந்திர பாண்டேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement