சொத்து வரி நிர்ணயிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; வருவாய் உதவியாளர் அகமது உமர் கைது!

10

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் அகமது உமரை, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையிலான போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வடுகப்பட்டி அருகிலுள்ள தெற்கு சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் புளியங்குடி நகராட்சி பகுதியில் காலி மனை விலைக்கு வாங்கி அதில் 800 சதுரஅடி அளவில் புதிதாக வீடு கட்டி உள்ளார். புதிய வீட்டிற்கு சொத்து வரி கட்டுவதற்காக புளியங்குடி நகராட்சிக்கு சென்றுள்ளார்.


அவர், சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் சொத்துவரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் நானே வரி செலுத்தி ரசீதைப் பெற்றுத் தருகிறேன் என கறாராக தெரிவித்துள்ளார்.




லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை கொண்டு சென்று கொடுத்தார். அகமது உமர் அதை வாங்கிக்கொண்டார்.


அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பால் சுதர் தலைமையிலான போலீஸ் படையினர், ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement