பிரவீன் நெட்டார் கொலை வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு : பா.ஜ., யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று மேலும் நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், பெல்லாரே கிராமத்தை சேர்ந்த பா.ஜ., யுவ மோர்ச்சா பிரமுகர் பிரவீன் நெட்டார். இவரை, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், 2022ல் வெட்டி கொலை செய்தனர்.

இவ்வழக்கை சுள்ளியா போலீசார் விசாரித்து வந்தனர். பொது மக்களிடம் இருந்து எழுந்த அதிருப்தியால், இவ்வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய அவர்கள், 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரவீன் நெட்டார் கொலை வழக்கில், இதுவரை 23 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதில் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். நேற்று (முன்தினம்) அப்துல் நாசிர், நவுஷத், அப்துல் ரஹ்மான், ஆதீக் அகமது ஆகிய நான்கு பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதில், அப்துல் நாசிர், நவுஷத், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ஆதீக் அகமது, கடந்தாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக உள்ள இவர்கள், முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு மைசூரு, சாம்ராஜ் நகர், தமிழகம் ஈரோட்டில் அடைக்கலம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஆறு பேர் தலைமறைவாக உள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement