அழகர் அணை திட்டம் நிறைவேற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பில் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சுந்தரராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே செண்பகத்தோப்பு பின்புறம் அழகர்மலை உள்ளது. இங்கு அணை அமைக்க சாத்தியக்கூறுகள் பற்றி அரசிடம் 1973ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை நிறைவேற்றினால் கால்வாய் மூலம் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக பரமக்குடி வைகை ஆற்றில் இணைக்கலாம்.

மற்றொரு கால்வாய் மூலம் ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லுார் வழியாக சங்கரன்கோவில்வரை நீரை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் அர்ச்சுனா ஆறு, பேயனாறு, வைப்பாறுகளில் எப்போதும் நீர்வரத்து கிடைக்கும். விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தலாம். அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பொதுப்பணித்துறை செயலர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர், வைப்பாறு பாசன கண்காணிப்பு பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Advertisement