வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

1

விருதுநகர்: மோசடி வழக்கில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிந்திரன். இவர் தமது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருமாறு அப்போது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக இருந்த விஜய நல்லதம்பி என்பவரிடம் ரூ.3 கோடியை கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் கால தாமதப்படுத்தியதாக தெரிகிறது.


கொடுத்த பணத்தை கேட்டபோது, அப்போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்து விட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது ரவிந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


மனு மீது விசாரணை நடைபெற்ற தருணத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பதாக கூறி வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்கு தொடரப்பட, இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், அவர் மீதான வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார்.


இதையடுத்து ஓரிரு நாளில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஆன்லைன் மூலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மோசடி வழக்கு வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.


முன்னதாக இதே வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022ம் ஆண்டு ஜன.5ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் அவர் ஜாமினில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement