தர்பூசணி விலை குறைந்ததால் ஏரியில் கொட்டும் அவலம்

1

அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் பகுதியில் தர்பூசணி விலை குறைந்ததால், ஏரியில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம், ஏம்பலம் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தர்பூசணி பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போன நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் 7,000 ரூபாய் வரை விலை போனது. ஆனால், கடந்த ஒரு வாரமாக 1500 முதல் 2,000 ரூபாய் வரை விலை போகிறது.

ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில் திண்டிவனம், முருக்கேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.

இதனால், மனமுடைந்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இலவசமாகவும், ஒரு விவசாயி டிராக்டரில் தர்பூசணியை ஏற்றி வந்து, உடைத்து ஏரியில் மீன்களுக்கு இறையாக போட்டு சென்றுள்ளார். தர்பூசணிக்கு விவசாயிகள் சகட்டுமேனிக்கு மிகவும் குறைந்த விலை கேட்பதால் இதுபோன்று செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement